தக்காளி பயிர் பாதுகாப்பு
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
நாற்று நட்ட 30ம் நாள் ஒரு கைக்களை எடுக்கவேண்டும். அதன்பிறகு களை எடுக்க வேண்டியது இல்லை.
பயிர் பாதுகாப்பு
காய்ப்புழு மற்றும் புரொடீனியாப் புழு
இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும். தாக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழிக்கவேண்டும், வளர்ந்த புழுக்களையும் அழிக்கவேண்டும்.
காய்ப்புழுவிற்கு என்.பி.வி வைரஸ் கலவை தெளிக்கவேண்டும்.
புரொடீனியாப் புழுவிற்கு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.
வேர் முடிச்சு நூற்புழு
கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் விதைக்கும் போது இடவேண்டும்.
இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்
இந்நோய் தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெண் ஈக்கள் மூலமாகப் பரவுகிறது. இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
இலைப்பேன்கள்
இது தக்காளியில் புள்ளி வாடல் நோயினைப் பரப்பும் காரணியாக செயல்படுகிறது. இந்நோயினால் தாக்கப்பட்ட செடிகளை முதலில் களைவதுடன் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 7 கிலோ ப்யூரடான் குருணை மருந்தை இடவேண்டும்.
வேர்அழுகல் நோய் தாக்குதல்
பயிர் நடவு செய்த 25 நாட்களுக்கு மேல் செடி ஆங்காங்கே வாடி காய்ந்து விடும். இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நடவு செய்த ஒரு வாரத்திற்குள் டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ, மக்கிய தொழு எரு 50 கிலோவுடன் கலந்து வயலில் தூவிவிட வேண்டும். இரசாயன முறையில் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் கார்பன்டாசிம் கலந்து வேரில் நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும்.
அறுவடை
நன்கு திரண்ட காய்களை அறுவடை செய்ய வேண்டும். காய்கள் கரும்பச்சை நிறத்தில் இருந்து சிறிது மஞ்சள் நிறத்திற்கு மாறும்போது அறுவடை செய்ய வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்
135 நாட்களில் ஒரு எக்டருக்கு 35 டன் பழங்கள் வரை கிடைக்கும்.
ஊடுபயிர்
வரப்பு பயிராக ஆமணக்கு சாகுபடி செய்யலாம்.
Comments
Post a Comment