கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளும், அவற்றிற்கான முதலுதவியும்
கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளும், அவற்றிற்கான முதலுதவியும்
🐄 கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கால்நடைகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்படும் பொழுது மருத்துவரை தான் அணுக வேண்டியுள்ளது.
🐄 எனவே கால்நடைகள் வைத்துள்ள அனைவரும், கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அவற்றிற்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
🐄 மருத்துவர் வரும்வரை காத்திருக்காமல் கால்நடைகளுக்கு நம்மால் முடிந்த அளவு சிகிச்சை அளிப்பது மிகவும் நல்லது.
🐄 கால்நடைகளுக்கு பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அவற்றிற்கான சிகிச்சை முறைகளை பார்ப்போம்.
கண்ணில் நீர் வடிதல் :
🐄 சில கால்நடைகளுக்கு திடீரென கண்ணில் இருந்து நீர் வடியும். தூசி அல்லது முள் போன்றவை கண்ணில் விழுந்திருந்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
🐄 நீர் வடிவதை நிறுத்துவதற்கு சுத்தமான விளக்கெண்ணெய் இரண்டு துளிகள் விட வேண்டும். இதனால் எரிச்சல் மற்றும் நீர் வடிதல் குறையும்.
🐄 மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவர் வரும் வரை சுத்தமான துணியை கொண்டு கண்களை மூட வேண்டும்.
குளம்பு காயங்கள் :
🐄 குளம்பில் காயம் ஏற்படுவதற்கு ஆணி, முள், கண்ணாடி துண்டு போன்றவை காரணமாக இருக்கலாம். முதலில் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்து, குளம்பின் அடிப்பகுதியை நன்கு சோதிக்க வேண்டும்.
🐄 அப்பொழுது ஆணி, முள், கண்ணாடி துண்டு போன்றவை காணப்பட்டால் அவற்றை கவனமாக அகற்ற வேண்டும்.
🐄 மேலும் அப்பகுதியில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின் அதன் மேல் வேப்பெண்ணெய் அல்லது மஞ்சள் கலந்த களிம்பை புண் ஆறும் வரை தடவி வர வேண்டும்.
மடி காம்புகளில் காயம் :
🐄 மடி மற்றும் காம்புகளில் புண்கள் ஏற்பட்டால், அவற்றின் மூலமாக கிருமிகள் மடிக்குள் சென்று விடும். இதனால் கால்நடைகளுக்கு மடி நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும்.
🐄 இதனை தடுக்க காயம் அல்லது புண் ஏற்பட்டவுடன் அந்த பகுதியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை கொண்டு கழுவ வேண்டும்.
🐄 பின்னர் போரிக் பவுடருடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து பிசைந்து, அந்த களிம்பை காயங்கள் மீது தடவி வர வேண்டும்.
காயங்கள் :
🐄 கால்நடையின் எந்த பகுதியில் காயங்கள் இருந்தாலும் முதலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை கொண்டு கழுவ வேண்டும்.
🐄 ஈக்கள் தாக்கிய பகுதியாக இருந்தால் அவற்றின் முட்டைகள் மூலம் புழுக்கள் உருவாகி விடும். எனவே அந்த பகுதியில் புழுக்களை நீக்கி விட்டு பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை கொண்டு கழுவிய பின்னர் டர்பண்டைன் எண்ணெயில் நனைத்த துணியை புண்ணில் வைக்க வேண்டும்.
🐄 அடுத்த நாள் துணியை நீக்கிவிட்டு காயத்தை கழுவிய பின்னர் வேப்பெண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்த களிம்பை கொண்டு புண்கள் ஆறும் வரை தடவி வர வேண்டும்.
🐄 இவை அனைத்து கால்நடைகள் வைத்திருப்போர் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகளாகும்.
Comments
Post a Comment